மத்திய கிழக்கில் பல மாதங்களாகத் நீடித்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், தற்போது மிகவும் கவலைக்கிடமான ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது. இப்போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “ஈரான் மீது மற்றொரு பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுத்து அவர்களை அழிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற மிகப்பெரிய முடிவை நான் எடுக்க வேண்டியுள்ளது” என்று ‘ஆக்சியோஸ்’ (Axios) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பரபரப்பாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய வளைகுடா நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதற்கு முன்னதாக ட்ரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சவுதி எண்ணெய் ஆலைகள் மீது ஈரான் பதிலடித் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் முக்கிய ராணுவ நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப், தற்போது கடற்படை முற்றுகை, பொருளாதாரத் தடைகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான கடற்படை முற்றுகையானது ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்கியுள்ளதாகவும், இதனால் டெஹ்ரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வர விரும்புவதாகவும் ட்ரம்ப் குறிப்பிடுகிறார். அதேவேளையில், இந்த ஆண்டு இறுதி வரை போர்க்கால அடிப்படையில் ராணுவப் பலத்தைப் பராமரிக்குமாறு பென்டகனுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது அமைதியோ அல்லது போரோ நீடிக்க முடியாத சூழல் நிலவுவதால், வரவிருக்கும் இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீதான பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடையலாம் என அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, ரஷ்யா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் பொருளாதாரத் தடைச் சட்டம், 2026’ மசோதாவை அமெரிக்க பிரதிநிதிகள் சபை 262-159 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவில் அதிபர் ட்ரம்ப் விரைவில் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இச்சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஈரானின் பொருளாதார நிலை மேலும் சிக்கலாகி, மத்திய கிழக்கின் அமைதி கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.
