அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. ஒரு பக்கம் அமைதிக்கான கதவுகள் திறந்திருப்பதாகத் தோன்றினாலும், மறுபக்கம் போர் மேகங்கள் இன்னும் விலகவில்லை. வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் இந்த நிலையற்ற சூழல், சர்வதேச அளவில் பெரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சங்களை உருவாக்கியுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் உள்கட்டமைப்புகளை, குறிப்பாக மின் நிலையங்கள் மற்றும் பாலங்களை அடியோடு தகர்த்துவிடுவேன் என அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். “நாங்கள் வழங்கும் நியாயமான ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும், இல்லையெனில் அந்நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும்” என டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து கப்பல்கள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடுதான் இந்த ஆக்ரோஷமான கருத்துக்கு முக்கியக் காரணமாகும். இது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், இத்தகைய மோதல்களால் ஈரானின் பொருளாதாரத்திற்குத் தான் நாளொன்றுக்கு 500 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவிற்குத் தேவையான எரிபொருள் வரத்து டெக்சாஸ் மற்றும் அலாஸ்கா துறைமுகங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதாகவும், இதனால் ஈரானின் மிரட்டல்கள் தங்களை பாதிக்காது என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
கடுமையான மிரட்டல்களுக்கு மத்தியிலும், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர டிரம்ப் தனது நம்பிக்கைக்குரிய தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பியுள்ளார். கடந்த முறை துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் பங்கேற்ற நிலையில், இந்த முறை முக்கிய ஆலோசகர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். நாளைய பேச்சுவார்த்தையில் ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உடன்படுமா அல்லது வளைகுடா பிராந்தியம் ஒரு முழு அளவிலான போரை நோக்கித் தள்ளப்படுமா என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
