ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸின் சமீபத்திய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய அவர், சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடுவோம் என்ற ஈரானின் மிரட்டல் எவ்வகையிலும் தற்காப்பு நடவடிக்கையாகக் கருதப்படாது என்று சாடினார். அமெரிக்காவின் இந்த கடுமையான விமர்சனத்தால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், அமைதிக்கான சூழல் நிலவும் போது அமெரிக்க அதிகாரிகள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசுவது முறையற்றது எனக் கூறி கொந்தளித்துள்ளது.
அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் தனது உரையில், சர்வதேச நீர்வழிகளை மூடுவது என்பது உலகப் பொருளாதாரத்தையே முடக்கும் ஒரு ‘சர்வதேச மிரட்டல்’ என்றும், இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைத் தடுப்பதன் மூலம் உலகளாவிய உணவு, அத்தியாவசிய உதவிப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்தால், அந்நாட்டின் ராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்த அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ராஜதந்திர தீர்வுகளுக்கு வாய்ப்பளிப்பார் என்றாலும் அவரது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதைக் குறிப்பிட்டார்.
சமீபத்தில் ஹார்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. அதற்குப் போட்டியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதே தற்போதைய மோதல்களின் பின்னணியாகும். இந்த தீவிரமான சூழலுக்கு மத்தியில், மைக் வால்ட்ஸ் தற்போது விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை, இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட வேண்டிய அமைதி ஒப்பந்தத்தை மேலும் தள்ளிப்போகச் செய்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்களைச் சூழ வைத்துள்ளது.
