அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த கடுமையான போர்ச் சூழல் காரணமாக, அவரது உடல் சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரானில் சுமார் 4 கோடி மக்கள் பங்கேற்ற கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு நடைபெற்றது. அப்போது முன்வரிசையில் கருப்பு நிற மாஸ்க் மற்றும் பேஸ்பால் தொப்பி அணிந்து அமர்ந்திருந்த ஒரு மர்ம நபர், சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும் உளவு அமைப்புகளின் சந்தேகத்தையும் கிளப்பினார்.
தற்போது அந்த மர்ம நபர் யார் என்பதற்கான அதிகாரப்பூர்வ விடை கிடைத்துள்ளது. அவர் வேறு யாருமல்ல, மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மூத்த மகனான முஸ்தபா கமேனியின் மகன் முகம்மது ஜவாத் காமெனி ஆவார். தனது தாத்தா கொல்லப்பட்ட அதே பிப்ரவரி 28 தாக்குதலின் போது, ஜவாத்தும் அங்கேயே இருந்துள்ளார். அந்த பயங்கர வெடிவிபத்தில் அவரது முகத்தில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதன் காரணமாகவே, அவர் பொதுவெளியில் தனது முகத்தைக் காட்ட விரும்பாமல் கருப்பு மாஸ்க்கால் மறைத்து இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மறுபுறம், அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் அடுத்த உச்ச தலைவராக அவரது மற்றொரு மகனான மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், தந்தை கொல்லப்பட்ட அதே வளாகத்தில் இருந்த மொஜ்தபாவும் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. போர் முடிந்து பல மாதங்கள் ஆகியும், புதிய உச்ச தலைவரான மொஜ்தபா இன்னும் மக்கள் முன்னிலையில் தோன்றாமல், அரசு ஊடகங்கள் வாயிலாக மட்டுமே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இதனால் அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்த மர்மம் மத்திய கிழக்கு அரசியலில் இன்னும் நீடித்து வருகிறது.
