நடிகை திரிஷா மற்றும் நடிகர் விஜய் குறித்து அண்மையில் தான் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அது தொடர்பாக இயக்குநர் பார்த்திபன் தற்போது புதிய விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “தனியார் நிகழ்ச்சி ஒன்றில் திரிஷா பற்றி நான் பேசியது திட்டமிட்டது அல்ல, அந்த நேரத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்தபோது வந்த வார்த்தைகள் தான் அவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விஜய் தனது நெருங்கிய நண்பர் என்றும், திரிஷா போன்ற ஒரு திரை நட்சத்திரம் உடல் தானம் செய்ய முன்வந்திருப்பதை அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறி, அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தனது விளக்கத்தை அளிப்பதன் மூலம் தேவையற்ற ‘பக்க விளைவுகள்’ அநாகரிகமாக அரங்கேறுவதை தான் விரும்பவில்லை என்று கூறிய பார்த்திபன், இதற்காக மன்னிப்பு கோருவதோடு இனி இது குறித்து பேசப்போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் இளையராஜாவின் அறிவுரை ஒன்றைக் குறிப்பிட்ட அவர், வாழ்க்கையில் செய்த தவறுகளை மாற்ற முடியாது என்றாலும், இனிமேல் அத்தகைய தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று உருக்கமாகப் பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் வளர்ச்சி மற்றும் அது தொடர்பான விமர்சனங்கள் குறித்தும் தனது பார்வையை முன்வைத்த பார்த்திபன், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
