இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அரசின் திட்டங்கள் முதல் பான் கார்டு வரை ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கவும் நலத்திட்டங்களின் பலன்களை பெறுவதற்கும் அவசியமானதாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் என அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றால் தபால் அலுவலகம், வங்கிகள் மற்றும் ஆதார் மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் மக்கள் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆனால் கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மொபைல் போன் செயலி மூலமாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆதாரில் மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே ஓடிபி மற்றும் முக அங்கீகாரம் மூலமாக மாற்றிக் கொள்ள முடியும். ஆதார் மையங்களில் இனியும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் வேண்டாம்.
