உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்திலும் செய்தித்தாள் வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் காளை வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக செய்தித்தாள் வாசிப்பதற்காக மாணவர்களுக்கு தினமும் 10 நிமிடம் ஒதுக்கப்பட வேண்டும். அந்தப் பத்து நிமிடங்களில் தேசிய, சர்வதேச மற்றும் விளையாட்டு செய்திகளில் இருந்து முக்கிய செய்திகளை ஒருவருக்கொருவர் வாசித்துக் காட்ட வேண்டும்.
இதற்காக இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை தினமும் வாங்கி வைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் சொல்வளத்தை மேம்படுத்தும் வகையில் செய்தித்தாள்களிலிருந்து ஐந்து கடினமான சொற்களைத் தேர்வு செய்து இன்றைய சொல் என்ற தலைப்பில் அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செய்தித்தாள் தலையங்கத்தின் அடிப்படையில் மாணவர்களிடம் குழு விவாதம் நடத்த வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
