சிவாஜிக்கே நடிக்க சொல்லிகொடுத்த இயக்குனர்… ஷுட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறிய நடிகர் திலகம்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

ஒரே படத்தில் சிவாஜி கணேசன் முன்னணி நடிகராகவும், திறமையான நடிகராகவும் அறியப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தமிழ் சினிமாவின் கொடுமுடியாக வலம் வந்தார். எம் ஜி ஆர் –சிவாஜி என்ற இருமைதான் தமிழ் சினிமாவில் கோலோச்சியது.

   

சிவாஜியின் நடிப்பு மிகை நடிப்பு என சொல்லப்பட்டாலும், அவரை அந்த காலத்தின் கலைவெளிப்பாடு என்றே பலரும் சொல்கின்றனர். சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது ஒருமுறை கூட அறிவிக்கப்படவில்லை. ஆனால் வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

1967-ம் ஆண்டு இயக்குனர் திலகம் என்று அழைக்கப்படும் கே.எஸ்.கோபலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் பேசும் தெய்வம். இந்த படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, சவுக்கார் ஜானகி, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

இந்த படத்தின் ஒரு முக்கியமானக் காட்சியைப் படமாக்கிய போது சிவாஜி கணேசன் சரியாக நடிக்கவில்லை என்று இயக்குனர் கோபாலகிருஷ்ணனுக்கு தோன்றியுள்ளது. அதனால் மீண்டும் மீண்டும் அந்த காட்சியை படமாக்கியுள்ளார்.  ஒரு கட்டத்தில் சிவாஜி கணேசன் ‘எனக்கு தெரிந்த அத்தனை விதமாகவும் நடித்துவிட்டேன். இதற்கு மேல் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. தயவு செய்து நீ நடித்து காட்டு அதன்பிறகு அதை பார்த்துவிட்டு அதே மாதிரி நான் நடிக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட பின்னர் இயக்குனர் எப்படி நடிக்க வேண்டும் என நடித்துக் காட்டியுள்ளார். அதைப் பார்த்த சிவாஜி கணேசன் செட்டை விட்டே வெளியேறிவிட்டாராம். அதன் பிறகு நள்ளிரவு நேரத்தில், சிவாஜியிடம் இருந்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு போன் வருகிறது. அதில் பேசிய சிவாஜியின் உதவியாளர்,’நாளை காலை 7 மணிக்கு தயாராக இருங்கள்” எனத் தகவல் வந்துள்ளது.

மறுநாள் சிவாஜியின் நடிப்பை பார்த்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கண் கலங்கியுள்ளார். வேகமாக ஓடிச்சென்று சிவாஜியை கட்டிப்பிடித்துக்கொண்டு ’இதை தான் நேற்று நடிக்க சொன்னேன்’ என்று சொல்ல, அவரிடம் சிவாஜி “நீ நடித்து காட்டியவுடன், நாம் பல படங்களில் நடித்திருக்கிறோம். இவர் நடித்தது போன்று இதுவரை நடித்தது இல்லையே என்று யோசித்துதான் வீட்டிற்கு கிளம்பி போய்விட்டேன். வீட்டில் போய் கண்ணாடி முன்பு நின்று நீ நடித்தது போன்று 20 முறைக்கு மேல் நடித்து பார்த்தேன். என் நடிப்பின் மீது எனக்கே திருப்தி ஏற்பட்ட பிறகுதான் நான் உனக்கு போன் செய்து நாளை ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன்” எனக் கூறினாராம்.