பூமிக்கு காத்திருக்கும் கொடூர பேரழிவு…. ஆண்ட்ரோமடாவுடன் மோதும் பால்வெளி மண்டலம்… விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!

By Nanthini on வைகாசி 22, 2026

Spread the love

தோற்றம் என்று ஒன்று இருந்தால் அழிவு என்று ஒன்று நிச்சயம் உண்டு என்ற பிரபஞ்ச விதியின்படி, நாம் வாழும் இந்த பேரண்டமும் (Universe) ஒரு நாள் அழியப்போகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது இன்னும் பல டிரில்லியன் ஆண்டுகள் நீடிக்கும் என்ற பழைய கணிப்புகளை உடைக்கும் வகையில், ஸ்பெயின் நாட்டின் ‘டோனோஸ்டியா சர்வதேச இயற்பியல் மையத்தைச்’ சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஹோங் நஹான் லுயூ மற்றும் அவரது குழுவினர் அதிரடியான புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்படி, பேரண்டத்தின் ஒட்டுமொத்த ஆயுட்காலம் வெறும் 33.3 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே என்றும், எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே இந்த பிரபஞ்சம் முற்றிலும் அழியக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பிற்குப் (Big Bang) பிறகு, தற்போது அதன் வயது 13.8 பில்லியன் ஆண்டுகளாக உள்ளது. புதிய கணக்கீட்டின்படி பார்த்தால், பேரண்டத்திற்கு இன்னும் 19.5 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே மீதமுள்ளது. அதாவது, நமது பிரபஞ்சம் தனது ஒட்டுமொத்த ஆயுளில் 41 சதவீதத்தைக் கடந்து, மனிதனின் சராசரி வாழ்நாளுடன் ஒப்பிடுகையில் முப்பதுகளின் (30s) வயதில் நடுத்தரப் பருவத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்பு ‘டார்க் எனர்ஜி’ (Dark Energy) எனப்படும் மர்மமான விண்வெளி விசை பிரபஞ்சத்தை எப்போதும் விரிவடையச் செய்துகொண்டே இருக்கும் என்றும், இதனால் அதற்கு அழிவே இல்லை என்றும் விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால், ‘டார்க் எனர்ஜி சர்வே இன்ஸ்ட்ருமென்ட்’ மூலம் 47 மில்லியன் கேலக்ஸிக்களை ஆராய்ந்ததில், இந்த டார்க் எனர்ஜி நிலையானது அல்ல, அது காலப்போக்கில் மாறக்கூடியது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

   

இந்த மாற்றத்தின் விளைவாக, பிரபஞ்சம் விரிவடைவது ஒரு கட்டத்தில் நின்று, அப்படியே தலைகீழாக மாறித் தன்னைத்தானே உள்நோக்கி இழுக்கத் தொடங்கும். பெருவெடிப்புக்கு முன்பு பிரபஞ்சம் எப்படி ஒரே ஒரு புள்ளியில் சுருங்கி இருந்ததோ, அதேபோல மீண்டும் சுருங்கும் இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் ‘பிக் கிரஞ்ச்’ (Big Crunch) என்று அழைக்கிறார்கள். பேரண்டம் இவ்வாறு உள்நோக்கிச் சுருங்கும்போது விண்வெளியில் உள்ள அத்தனை கேலக்ஸிகள், நட்சத்திரங்கள், பூமி உள்ளிட்ட கிரகங்கள் அனைத்தும் கொடூரமாக ஒன்றுடன் ஒன்று அழுத்தப்படும். இந்த நெருக்கடியால் விண்வெளிப் பொருட்கள் அனைத்தும் ஒன்றாகத் தள்ளப்பட்டு ராட்சத கருந்துளைகளை (Black Holes) உருவாக்கும் என்றும், இறுதியில் ஒட்டுமொத்த பிரபஞ்சமே அந்த மையப் புள்ளிக்குள் மூழ்கி மறைந்துவிடும் என்றும் டாக்டர் ஹோங் நஹான் லுயூ விளக்கியுள்ளார்.

   

இருப்பினும், இந்த அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடக்க இன்னும் 19.5 பில்லியன் ஆண்டுகள் இருப்பதால் நாம் இப்போதே கவலைப்படத் தேவையில்லை. மேலும், இன்னும் 4 முதல் 10 பில்லியன் ஆண்டுகளுக்குள் நமது பால்வெளி மண்டலமும் (Milky Way) அதன் அண்டை கேலக்ஸியான ஆண்ட்ரோமடாவும் (Andromeda) மோதிக்கொள்ளும் சூழல் உள்ளதால், அதற்கு முன்பே பூமியின் கட்டமைப்பு முற்றிலும் மாறிவிடும் என்பதும் கவனிக்கத்தக்கது. பிரபஞ்சத்தின் இறுதிப் பயணத்தை நோக்கிய இந்த முக்கியத் தரவுகள் முதன்முறையாகச் சேகரிக்கப்பட்டுள்ளதால், இதனை முழுமையாக உறுதிப்படுத்த விஞ்ஞானிகளுக்கு இன்னும் கூடுதல் காலம் தேவைப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவர்களின் இந்த அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கை அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.