தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யை தேசிய அரசியலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவர் அருகில் இருக்கும் “குள்ளநரி கும்பல்” முதலமைச்சர் பதவியைப் பிடிக்கத் திட்டம் போட்டு வருவதாக அப்பாவு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மைக்காலமாக தவெக தலைவர்கள் விஜய்யின் செல்வாக்கு வட மாநிலங்களிலும் உயர்ந்து வருவதாகவும், அவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவார் என்றும் பேசி வரும் நிலையில், அப்பாவின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவு தனது பதிவில், சிறுபான்மையினர் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த விஜய், தற்போது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்ட பாஜகவின் ஆட்சியைத் தமிழகத்தில் நடத்தி வருவதாகச் சாடியுள்ளார். சட்டமன்றத்தில் விஜய் தான் அடுத்த பிரதமர் என்று ஒரு அமைச்சர் பேசியபோது, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அதைத் தடுத்துக் கேட்காமல் மேஜையைத் தட்டி ரசித்தது வேடிக்கையாகவும் கேவலமாகவும் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். தேசிய அரசியல் ஆசையைக் காட்டி விஜய்யை பதவியில் இருந்து நீக்க நடக்கும் சதியை அவர் உணர்ந்துள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “அரசன் ஒரு முள் செடியை நட்டால் அமைச்சர்கள் முள் காட்டையே உருவாக்கி விடுவார்கள்” என்ற வடஇந்திய பழமொழியைச் சுட்டிக்காட்டிய அப்பாவு, பொய்யான தகவல்களை ரீல்ஸ்களாக மாற்றிப் பரப்பும் கலாச்சாரத்தை அரசு தொடங்கி வைத்துள்ளதாகக் கூறினார். தவெக அடிமட்ட தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் இதைப் பின்பற்றுவதாகவும், சட்டமன்றத்தில் சபாநாயகரால் நீக்கப்பட்ட வீடியோக்களைக் கூட போலிக் கணக்குகள் (Fake ID) மூலம் ரீல்ஸாக வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இறுதியாக, தவெக ஆட்சியில் இலவச மருத்துவ சிகிச்சை, உடனடி மரண தண்டனை போன்ற பொய் பிரச்சாரங்களை வட மாநிலங்களில் பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்தியில் ரீல்ஸ் தயாரித்து பரப்பி வருவதாக அப்பாவு குறிப்பிட்டுள்ளார். மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் தவெகவின் இந்த நடவடிக்கைகளை இந்தியாவே பார்த்து சிரிப்பதாகவும், பொய் ரீல்ஸ்களைப் பரப்பும் போலிக் கணக்குகள் மீது நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை வாங்கித் தர மக்கள் தயாராகி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
