BREAKING: தமிழகத்தில் மீண்டும் லாக்-அப் மரணமா?…. கைது செய்யப்பட்ட 3 நாட்களில் நேர்ந்த கொடூரம்…. சிறையில் கைதி மரணம்.. கொதித்தெழும் கன்னியாகுமரி..!

By Nanthini on ஆடி 13, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன் (35) என்பவர், நாகர்கோவில் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். அண்மையில் 200 கிராம் குட்கா விற்பனை செய்ததாகக் கூறி இவரை நேசமணி நகர் போலீசார் கைது செய்து, கடந்த 9-ஆம் தேதி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், நேற்று (ஜூலை 12) நள்ளிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக ஆச்சாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சபரிவர்மனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சாரிபள்ளம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபரிவர்மனின் சகோதரி, “அவருக்கு உடல்நலக் குறைவு எதுவும் இல்லை; போலீசார் சிரித்துக்கொண்டே மாரடைப்பு என்று கூறுகிறார்கள். அவரை அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடுகிறார்கள்” என கண்ணீருடன் குற்றம்சாட்டினார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

   

கைதி மரணம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சபரிவர்மனின் உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே அவரது உயிரிழப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குட்கா வழக்கில் கைதான இளைஞர் சிறையில் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.