திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சரவணம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் துர்க்கைராஜ் (30). இவருக்கும் இவரது மனைவி சுலோச்சனாவிற்கும் (28) இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, சுலோச்சனா கோபித்துக் கொண்டு தனது மகனுடன் புளியம்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று மனைவியைச் சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்துச் செல்வதற்காக துர்க்கைராஜ் தனது மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சுலோச்சனாவின் அண்ணனான பரத் (32) இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், பேச்சுவார்த்தையின் போது துர்க்கைராஜுக்கும் பரத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பரத், அருகில் கிடந்த கல்லை எடுத்து மைத்துனர் என்றும் பாராமல் துர்க்கைராஜின் தலையில் போட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த துர்க்கைராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரத்தைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை அழைக்க வந்த இடத்தில் மைத்துனரே படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
