கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே பள்ளியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியாகி உள்ள தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பிய சிறுமி, உடல் நலக்குறைவு மற்றும் அசாதாரணமான பயத்துடன் காணப்பட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியிடம் கனிவோடு விசாரித்தபோது, பள்ளியில் தனக்கு நேர்ந்த துயரத்தை அழுதுகொண்டே விவரித்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.
பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பள்ளி வளாகத்தில் உள்ள ஊழியர் ஒருவரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளி என்பது குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் வேளையில், பிஞ்சு என்றும் பாராமல் பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டிற்கு காரணமான நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என்றும் கூறி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
