ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது தமிழக மீனவர்களை, எல்லை தாண்டியதாகக் குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்புதான் படகின் இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தவித்த 11 மீனவர்கள் இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றிருந்த சமயத்தில் ரோந்துப் கப்பல்களில் வந்த இலங்கை ராணுவம் மீண்டும் இந்த ஒன்பது பேரை கைது செய்துள்ளது மீனவ சமுதாயத்தினரிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த மடலில், சிறைபிடிக்கப்பட்ட ஒன்பது மீனவர்களையும் அவர்களது விசைப்படகையும் பத்திரமாக மீட்க உடனடியாகத் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழக மீனவர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வையும் பெரும் வாழ்வாதார சிக்கலையும் உருவாக்கியுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முந்தைய அரசு கடிதம் எழுதியதை ‘மானே, தேனே, பொன்மானே’ என விமர்சித்துவிட்டு, உணர்வுப்பூர்வமான நடவடிக்கை தேவை என்று முழங்கியவர்கள், இன்று ஆளுங்கட்சியான பிறகு கடமைக்கு வெறும் கடிதம் மட்டும் எழுதுவது ஏன் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, பின் ஒரு பேச்சு என ஏமாற்று வேலைகளில் ஈடுபடாமல், இந்த ‘சோஃபா மாடல்’ அரசு உடனடியாக இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
