135 கோடி மெத் போதைப்பொருள் விவகாரம்…. தவெக கூடாரமா அல்லது ‘நர்கோஸ்’ ராஜ்யமா?…. கிழித்துதொடங்கவிட்ட உதயநிதி….!

By Nanthini on ஐப்பசி 19, 2026

Spread the love

நாகை மாவட்டத்தில் வருவாய் புலனாய்வு இயக்குரக அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், 135 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைக் கலாச்சாரத்தை ஒழிப்பதாகத் தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அவரது கட்சியின் முக்கிய நிர்வாகியே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பூபாலன் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டிருந்தாலும், தவெகவின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் இந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை மிரட்டியுள்ளது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய நபருக்கு ஆதரவாகக் கட்சியினர் வக்காலத்து வாங்குவதோடு, ஊடகவியலாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுவதும் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கட்சியா அல்லது போதைப்பொருள் கும்பலின் கூடாரமா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

   

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் ஆளுங்கட்சியினரின் ஈடுபாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். “டம்மி முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் விளம்பரங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அரசின் எதார்த்த நிலையை உணர்ந்து போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் நெட்வொர்க்குகளின் ஆதிக்கம் இளைய சமுதாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. அரசியல் கட்சிகளின் பெயர்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். மக்களின் பாதுகாப்பையும் சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்ட, போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.