மதுராந்தகத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது, சட்டப்பேரவையின் மாண்பை தற்போதைய ஆளுங்கட்சியினர் முற்றிலும் கெடுத்துவிட்டதாக அவர் கடுமையாகச் சாடினார். மக்கள் பிரச்சனைகள் குறித்த கேள்விகளுக்குத் துறை சார்ந்த அமைச்சர்கள் உரிய பதிலளிக்காமல் தவிர்ப்பதாகவும், அவைத் தலைவரின் செயல்பாடுகள் மற்றும் ஆளுங்கட்சியினரின் பேச்சுகள் சட்டப்பேரவையை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி போல மாற்றிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கூட்டணியில் இருந்து திடீரென விலகிச் சென்றவர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு விமர்சித்தார். இரவோடு இரவாகத் திருட்டுத்தனமாக வெளியறியவர்கள், தங்களை நேரடியாகப் பிரதமர் வேட்பாளராகக் கருதிக் கொண்டுச் சென்றதாகவும், அவர்களின் தற்போதைய நிலைமை என்னவென்று மக்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும் என்றும் அவர் எள்ளி நகையாடினார்.
இந்த உரையின் நடுவே, கூட்டத்தில் பங்கேற்ற திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், “காங்கிரஸை சேர்க்காதீங்கணா” என்று சத்தமாகப் பேரணியில் குரல் எழுப்பினார். எதிர்பாராத இந்தக் குரலைக் கேட்டதும் மேடையில் இருந்த உதயநிதி ஸ்டாலின், சட்டென்று சிரித்தபடியே “திருப்பி சேர்த்தா நீங்க விட்டிருவீங்களா?” என்று நகைச்சுவையாகக் கேட்டார்.
சபையில் இருந்த தொண்டரின் திடீர் கூச்சலும், அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த சமயோசிதமான, லேசான நகைச்சுவை கலந்த பதிலும் அங்கிருந்த நிர்வாகிகளிடையே பெரும் சிரிப்பலை ஏற்படுத்தியது. தேர்தல் கூட்டணிகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து விவாதங்கள் சூடுபிடித்துள்ள சூழலில், உதயநிதியின் இந்த சுவாரஸ்யமான ரியாக்ஷன் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது.
