டெல்லியில் டேட்டிங் செயலி மூலம் 67 வயது முதியவரிடம் ரூ. 1.30 லட்சம் பணம் பறித்த வழக்கின் பின்னணியில் செயல்பட்ட இரண்டு இளம் பெண்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லியின் டிபன்ஸ் காலனி பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தில், ஜோத்ஸ்னா மற்றும் மான்சி ஆகிய இருவரும் போலி கணக்கு தொடங்கி முதியவரை இரவு உணவிற்காக நேரில் வரவழைத்துள்ளனர். தொடர்ந்து, அவரது கவனத்தைத் திருப்பி செல்போனைக் கைப்பற்றிய அப்பெண்கள், யுபிஐ (UPI) செயலி மூலமாக அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை தங்களுக்கு மாற்றிக் கொண்டு தப்பியோடினர்.
பாதிக்கப்பட்ட முதியவர் அளித்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், சிசிடிவி காட்சிப் பதிவுகள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீபகாலமாக டேட்டிங் செயலிகள் மூலம் அடையாளம் தெரியாத நபர்களை நேரில் சந்திக்கும் போது இதுபோன்ற நிதி மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், இணையவழி குற்றங்கள் குறித்து அறியவும் புகாரளிக்கவும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
