எகிப்து கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஹொசாம் ஹாசன், நாட்டின் வடக்குக் கரையில் உள்ள போர்ட்டோ மரினா விடுதியில் தங்கியிருந்தபோது, அவரது இரண்டு மனைவிகளுக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டு வன்முறையாக மாறியது. முதல் மனைவி ஹோவைதா அல்-கர்பாவி மற்றும் இரண்டாவது மனைவி தீனா முஸ்தபா ஆகிய இருவருக்கும் இடையே உணவகத்தில் ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் ஒருவரையொருவர் தாக்கும் அளவுக்குப் பரவியது.
இந்த மோதலைத் தடுத்து நிறுத்த ஹொசாம் ஹாசன் முயன்றபோது, ஏற்பட்ட அதிகப்படியான மன உளைச்சல் மற்றும் பதற்றம் காரணமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார். விடுதிப் பாதுகாப்புப் பணியாளர்களும் உறவினர்களும் தடுத்து நிறுத்த முயன்றும் சண்டை தொடர்ந்ததால், காவல்துறையினர் தலையிட்டு சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மயக்கமடைந்த ஹொசாம் ஹாசன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். தற்பொழுது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
