தமிழ் சினிமாவுக்கு வயது 100க்கு மேல் ஆகிவிட்டது. பல ஆயிரக்கணக்கான படங்கள் வந்து அதில் சில ஆயிரம் படங்கள் வெற்றிப்படமாகியுள்ளன. நூற்றுக்கணக்கான ஜாம்பவான்கள் உருவாகியுள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவின் போக்கை அதன் பரிணாமத்தை புரிந்துகொள்ள போதுமான பதிவுகள் இல்லை. பல கிளாசிக் படங்களின் ஒரிஜினல் பிர்ண்ட் கூட இல்லை.
சினிமாவை பற்றி தமிழ் சினிமாக்கள் பெரிதாக வெற்றி பெற்றதேயில்லை என்ற செண்ட்டிமெண்ட் தமிழ் சினிமாவில் உண்டு. ஆனால் இலக்கிய உலகில் தமிழ் சினிமாவில் இருக்கும் அபத்தமான விஷயங்களைப் பற்றி இரண்டு அற்புதமான நாவல்கள் பதிவு செய்துள்ளன.
மறைந்த எழுத்தாளரான அசோகமித்ரன் எழுதிய கரைந்த நிழல்கள் நாவல் 50 களில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்டது. ஸ்டுடியோ முதலாளி ஒருவரின் அசுர வளர்ச்சியும், அக்காலத்தைய சினிமா நடிகைகள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களின் போராட்டத்தையும், சினிமாவில் கூலிக்கு வேலை செய்பவர்களின் பாடுகளையும் எதார்த்தமாக பதிவு செய்தது இந்த நாவல். தமிழ் இலக்கிய உலகில் ஒரு கிளாசிக் நாவலாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இதை எழுதிய எழுத்தாளர் அசோகமித்ரனே ஜெமினி ஸ்டுடியோவில் பல ஆண்டுகள் வேலை செய்தவர் என்பவர் மிக ஆழமாகவும், நுட்பமாகவும் சினிமா உலகத்தை இந்த நாவலில் பதிவு செய்துள்ளார்.
இதே போல சுஜாதா எழுதிய நாவலான கனவுத் தொழிற்சாலை நாவலும் மிக முக்கியமானது. தமிழ் சினிமாவில் விட்டேத்தியான போக்கை, ஜாலியான மொழிநடையில் தனக்கேயுரிய ஸ்டைலில் சுஜாதா இந்த நாவலில் பதிவு செய்துள்ளார். ஒரு வளர்ந்து வரும் நடிகன், அவனின் மேனேஜர், சக நடிகை மீது கொள்ளும் மோகம், சினிமா பாட்டு எழுத வந்து குடியடிமையாகும் பாடல் ஆசிரியர் என பலரின் வாழ்க்கையில் வெற்றி தோல்வி சமவிகிதத்தில் கலந்திருப்பதை விறுவிறுப்பான நடையில் இந்த நாவல் கூறியது.
இந்த இரண்டு நாவல்களுக்கு பிறகு சினிமா உலகைப் பற்றி இந்தளவுக்கு ஆழமாக விவாதித்த தமிழ் நாவல் வரவில்லை என்பது வாசகர்களுக்குதான் பேரிழப்பு.