தேனி மாவட்டம் போடியை அடுத்த ரங்கநாதபுரம் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன்கள் சபரீசன் (13) மற்றும் ஹரிஷ் (12). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள வெங்கடாசலபதி நடுநிலைப்பள்ளியில் முறையே 7 மற்றும் 6-ஆம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த ஜூலை 24-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள், மாலையில் வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காணாமல் போன சிறுவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாகச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுவர்கள் இருவரும் கேசவபாலாஜி என்ற இளைஞருடன் நடந்து செல்லும் அதிர்ச்சி காட்சி சிக்கியது. இதனிடையே, போடி அருகே உள்ள கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இரண்டு சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்துக் கேசவபாலாஜியைப் பிடித்துப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த கொடூரக் கொலையின் பின்னணியில் இருந்த திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
சின்னத்தம்பிக்கும் தன் தாய்க்கும் இடையே இருந்த தகாத உறவால் ஆத்திரமடைந்த கேசவபாலாஜி, அவரைப் பழிவாங்குவதற்காகவே அவரது மகன்களைக் கொல்லத் திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று “காட்டுப்புறா பிடித்துத் தருகிறேன்” என்று ஆசை வார்த்தை கூறி, இரண்டு சிறுவர்களையும் கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சுற்றுச்சுவர் இல்லாத சுமார் 150 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகே அழைத்துச் சென்று, இருவரையும் திடீரெனக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உடற்கூறாய்வுக்காகச் சிறுவர்களின் உடல்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் கேசவபாலாஜியைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டுக் குற்றவாளியின் வீட்டின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிறுவர்கள் இருவரும் ஆசையோடு கொலையாளியைப் பின்தொடர்ந்து செல்லும் கடைசி சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அனைவரது மனதையும் உலுக்கியுள்ளதோடு, தேனி மாவட்டம் முழுவதிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
