தெலுங்கானா மாநிலம் மஹ்பூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மேகனா ராணி (25) மற்றும் பாவனா (24) ஆகிய இரு இளம் பெண்கள், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிகழ்ந்த கோரமான கார் விபத்தில் உயிரிழந்தனர். உயர் படிப்பிற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்ற இவர்கள், தங்களது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த நிலையில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமை மாலை அலபாமா மலைப்பகுதி வழியாக நண்பர்களுடன் காரில் சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
உயிரிழந்த மேகனா ராணி கார்லா மண்டலத்தையும், பாவனா முல்கனூர் கிராமத்தையும் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் திடீர் மறைவு அவர்களது குடும்பத்தினரிடையேயும், கிராம மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீண்டும் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் உறவினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
