திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவிக்குத் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி வீட்டின் கதறியதையடுத்து, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். விசாரணையில் மேலும் பல மாணவிகளுக்கு அவர் தொல்லை கொடுத்தது அம்பலமானதை அடுத்து, தப்பியோட முயன்ற அந்தப் பாதிரியார் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் உனிசெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகத் தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் என்பவர் மீது புகார் எழுந்தது. கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இதுகுறித்துத் தனது தாயிடம் தெரிவிக்க, பெற்றோர் குழந்தை உதவி மையத்திற்கு (1098) தகவல் அளித்தனர். தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேரில் விசாரணை நடத்தி, பிரான்சிஸை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டிய பள்ளித் தலைமை ஆசிரியர்களே இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரு வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த இச்சம்பவங்கள் குறித்துக் கல்வித்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகளில் பாதுகாப்பான சூழல் நிலவுவதை உறுதி செய்ய அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
குழந்தைகளின் மன உளைச்சலைக் கண்டறிந்து துரிதமாகச் செயல்பட்ட பெற்றோர் மற்றும் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை, குழந்தை நல அதிகாரிகளின் செயல் பாராட்டுக்குரியது. இருப்பினும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் பள்ளி ஊழியர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். நமது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசும் சமூகமும் இணைந்து கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது தற்போதைய அவசிய தேவையாகும்.
