குஜராத் மாநிலம் சூரத் நகரின் டிண்டோலி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆத்மியா சன்ஸ்கர்தாம் சுவாமி நாராயண் கோயில் வளாகத்தில், இரு கல்லூரி மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்னா சிட்டிசன் கல்லூரியில் பயின்று வந்த நெருங்கிய தோழிகளான ரோஷ்னி சிர்சாத் (18) மற்றும் ஜோத்ஸ்னா சவுத்ரி (20) ஆகிய இருவரும், சம்பவத்தன்று வழக்கம்போல கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளனர். ஆனால், மாலை நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர்கள், செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது அது கோயில் வளாகத்தைக் காட்டியுள்ளது.
பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தபோது, மாணவிகள் வந்த இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. உடனே கோயில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இருவரும் பொதுக் கழிவறைக்குள் செல்வது பதிவாகியிருந்தது. உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துப் பார்த்தபோது, மாணவிகள் இருவரும் மயங்கிய நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்திலிருந்து ஊசிகள் மற்றும் மூன்று விஷத்தன்மை கொண்ட மயக்க மருந்து பாட்டில்களைக் காவல்துறை கைப்பற்றியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், இது ஒரு திட்டமிடப்பட்ட தற்கொலை என்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, அந்த மாணவிகள் கடந்த சில நாட்களாக கூகுள் மற்றும் சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, “வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்வது எப்படி?” மற்றும் “எளிதான வழிகள் என்ன?” என்பது குறித்துத் தீவிரமாகத் தேடியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இணையதளத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அவர்கள் மருந்துகளை வாங்கி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
மாணவிகள் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது குறித்து எந்தக் கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. இணையதளத் தகவல்களை வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட இந்தச் சம்பவம், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு இளம் பெண்களைப் பறி கொடுத்த குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது. இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், மாணவிகளின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய முயன்று வருகின்றனர்.
