“ஐயோ எங்க புள்ள எங்க?”…. புழல் ஏரியில் கதறிய பெற்றோர்கள்…. . 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாப பலி…. பெரும் சோகம்….!

By Nanthini on ஐப்பசி 20, 2026

Spread the love

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த அகில் ராம் மற்றும் தருண் ஆகாஷ் (இருவருக்கும் வயது 14) ஆகிய இருவரும், அம்பத்தூர் அடுத்த முருகாம்பேடு புழல் ஏரிக்குத் தங்கள் நண்பர்களுடன் நேற்று மதியம் குளிக்கச் சென்றுள்ளனர். ஏரியில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இரவு வெகுநேரமாகியும் சிறுவர்களைக் கண்டுபிடிக்க முடியாததால் மீட்புக் குழுவினர் திரும்பிச் சென்றனர். எனினும், ஆற்றாமையும் சோகமும் நிறைந்த பெற்றோர் ஏரிக்கரையிலேயே நின்று கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை மெரினா சிறப்பு மீட்புக் குழுவினர், நீச்சல் வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் மற்றும் தெர்மல் இமேஜிங் கேமரா போன்ற அதிநவீன உபகரணங்களின் உதவியுடன் இரண்டாவது நாளாகத் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

   

இந்தத் தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில் இரண்டு மாணவர்களும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அகில் ராமின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு மாணவரான தருண் ஆகாஷின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரே பள்ளியில் படித்து வந்த நண்பர்கள் இருவரும் ஏரியில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.