டெல்லியில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான ஐவிஎஃப் குளறுபடி காரணமாக, பிறந்து ஐந்து மாதங்களேயான இரட்டை பெண் குழந்தைகளின் டிஎன்ஏ முடிவுகள் பெற்றோருக்கு 0% கூட ஒத்துப்போகவில்லை என்ற செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி துவாரகா பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற நபர், கடந்த டிசம்பர் 2024 இல் தனது மனைவியின் சிகிச்சைக்காக ஒரு புகழ்பெற்ற ஐவிஎஃப் மையத்தை அணுகியுள்ளார். தங்களின் சொந்த அணுக்களை மட்டுமே பயன்படுத்துவதாக மருத்துவர்கள் உறுதியளித்த நிலையில், ஜனவரி 2026 இல் தம்பதியருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
குழந்தைகளின் முகம் தங்களின் குடும்பத்தில் யாருடனும் ஒத்துப்போகாததால் சந்தேகமடைந்த தந்தை, இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் டிஎன்ஏ சோதனை செய்துள்ளார். அதன் முடிவுகளில், அந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் பெற்றோர் என்று கூறப்பட்ட தம்பதியரின் மரபணுக்கள் சிறிதும் பொருந்தவில்லை என்பது அம்பலமானது. ஐவிஎஃப் ஆய்வகத்தில் கருக்கள் (Embryo) மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது பிரசவத்திற்குப் பிறகு குழந்தைகள் மருத்துவமனையில் மாற்றப்பட்டிருக்கலாம் என்று பாதிக்கப்பட்ட தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் இந்தத் தவறை ஒப்புக்கொள்ள மறுத்து, தம்பதியர் மீதே குற்றம் சுமத்தியதால், பாதிக்கப்பட்ட தந்தை நீதிமன்றத்தை நாடினார். தற்போது சாகேத் நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து (FIR) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களின் உண்மையான குழந்தைகளைத் தேடி கடந்த ஐந்து மாதங்களாகப் போராடி வரும் இந்த தம்பதியினர், ஜனவரி 2026 இல் அதே மருத்துவமனையில் குழந்தைகள் பெற்ற பிற பெற்றோர்களையும் டிஎன்ஏ சோதனை செய்து பார்க்குமாறு சமூக ஊடகங்கள் வாயிலாகக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
