சினிமா பாணி ட்விஸ்ட்: “ஒரே பிரசவம்.. ஒரே கனவு”… ஒரே நாளில் அரசு வேலை… கேரளாவை வியக்க வைத்த இரட்டைச் சகோதரிகள்….!

By Nanthini on சித்திரை 3, 2026

Spread the love

அரசு வேலை என்பது வெறும் வருமானத்திற்கான வழி மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் தலைெழுத்தையே மாற்றும் சக்தி கொண்டது. சமூக அந்தஸ்து, பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான சிறந்த வாழ்வாதாரம் எனப் பல பரிமாணங்களை இது வழங்குகிறது. இதனால்தான், லட்சக்கணக்கான இளைஞர்கள் கடும் போட்டிகளுக்கு இடையே அரசுத் தேர்வுகளுக்காகத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒருவர் அரசுப் பணிக்குச் செல்வதே பெரும் போராட்டமாக இருக்கும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், அதுவும் இரட்டைச் சகோதரிகள் ஒரே நேரத்தில் அரசுப் பணியில் இணைவது என்பது வியக்கத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சனா மற்றும் அர்ச்சனா ஆகிய இரட்டைச் சகோதரிகள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர். பிறப்பு முதல் கல்வி வரை அனைத்தையும் ஒன்றாகப் பகிர்ந்து கொண்ட இவர்கள், அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற கனவோடும் ஒன்றாகவே பயணிக்கத் தொடங்கினர். அஞ்சனா எம்.எஸ்சி., எம்.எல்.டி (M.Sc., MLT) படிப்பையும், அர்ச்சனா பொறியியல் படிப்பையும் முடித்திருந்தாலும், கேரள பொதுச்சேவை ஆணையத் தேர்வை (PSC) எதிர்கொள்ள இருவரும் இணைந்து கடுமையாக உழைத்தனர். அவர்களின் இந்த விடாமுயற்சி வீண் போகவில்லை.

   

சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் இருவரும் தேர்ச்சி பெற்று, தங்களது பணி நியமன ஆணைகளையும் பெற்றுள்ளனர். அஞ்சனா கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராகவும், அர்ச்சனா திரூரில் உள்ள சப்ளை-கோ கிடங்கில் உதவி விற்பனையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் தங்களது கனவு நனவானதை எண்ணி அந்தச் சகோதரிகளும், அவர்களது பெற்றோரான பாபு மற்றும் சிந்துவும் மிகுந்த நெகிழ்ச்சியில் உள்ளனர். இந்தப் பூமிப்பந்தில் ஒன்றாகப் பிறந்தவர்கள், தற்போது ஒரே நேரத்தில் அரசுப் பணியிலும் இணைந்து கேரள மக்களை நெகிழ வைத்துள்ளனர்.

   

தமிழ்நாட்டிலும் இது போன்ற பல வெற்றிக் கதைகள் அவ்வப்போது நம்மை ஊக்கப்படுத்துவது உண்டு. ஒரு தூய்மைப் பணியாளரின் மகள் ஆட்சியராகும் போது, அந்தப் பெயர் அந்தப் பெண்ணின் அடையாளத்தை மட்டுமல்ல, அந்தச் சமூகத்தின் பார்வவையையே மாற்றுகிறது. கடின உழைப்பும், தளராத நம்பிக்கையும் இருந்தால் எத்தகைய சவால்களையும் முறியடிக்கலாம் என்பதற்கு இந்த இரட்டைச் சகோதரிகளின் வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவர்களைப் போலவே தமிழ்நாட்டிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோன்று சாதித்த நிகழ்வுகள் உங்கள் நினைவில் இருந்தால், அதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்