தேனியில் கடந்த 7-ம் தேதி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே ஏற்பட்ட கடும் மோதல் விவகாரம் தற்போது கைது நடவடிக்கையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வன்முறை தொடர்பாக தவெக தேனி தெற்கு மாவட்டப் பொருளாளர் கவுதம், நிர்வாகிகள் தனவந்தன் மற்றும் வசந்த் ஆகிய மூன்று பேரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மிக முக்கியமான ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி தற்போது தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக இருக்கும் அவரைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருவதால், தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
