தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் சட்டமன்றத் தேர்தலில் வடசென்னையின் பெரம்பூர் தொகுதியில் களம் காண்பார் என்ற தகவல் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தென் மாவட்டங்கள் அல்லது கொங்கு மண்டலத்தில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உழைக்கும் மக்களின் அடையாளமாகத் திகழும் வடசென்னையை அவர் தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, பெரம்பூர் தொகுதியில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மிக உற்சாகமாகத் தொடங்கி இருப்பது, இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் முதல் படியாகப் பார்க்கப்படுகிறது.
பெரம்பூர் தொகுதியை விஜய் குறிவைப்பதற்குப் பின்னால் மிக வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள கணிசமான எண்ணிக்கையிலான சிறுபான்மையின வாக்குகள் மற்றும் தலித் சமூக மக்களின் ஆதரவு விஜய்யின் ‘மதச்சார்பின்மை’ கொள்கைக்குச் சாதகமாக அமையும் என த.வெ.க நம்புகிறது. பாரம்பரியமாக இது திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டாலும், விஜய்க்கு இருக்கும் தனிப்பட்ட இளைஞர் பட்டாளம் மற்றும் முன்னாள் அதிமுக பிரமுகர் வி.எஸ். பாபு போன்றவர்களின் உள்ளூர் செல்வாக்கு அந்தப் பிடிமானத்தை உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பனையூரில் வசிக்கும் விஜய், பெரம்பூர் தொகுதிக்கு ஒரு ‘அவுட்சைடர்’ (வெளியூர் ஆள்) என்கிற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கக் கூடும் என்ற சிக்கலும் உள்ளது. இந்த பிம்பத்தை உடைப்பதற்காக, விஜய் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். பெரம்பூர் தொகுதியிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் வசதியாக ஒரு பெரிய பங்களாவை விலைக்கு வாங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான ‘வீடு தேடும் படலம்’ தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை; இங்கேயே தான் இருப்பேன்” என்ற செய்தியை மக்களுக்குச் சொல்ல அவர் முனைகிறார்.
சினிமா திரையில் ‘எல்லா ஏரியாவும் என் ஏரியா’ என்று முழங்கிய விஜய், நிஜ அரசியல் களத்தில் வடசென்னை ஏரியாவைத் தனது முதல் போர்க்களமாக மாற்றத் தயாராகிவிட்டார். விஜய்யின் இந்தத் திட்டம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. “அட்ரஸ்” மாற்றி, பெரம்பூரில் அடியெடுத்து வைக்கப்போகும் தளபதியின் இந்த ‘அடுத்த கியர்’ பாய்ச்சல், 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
