தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் லஞ்சம் மற்றும் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று வருவதாகப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்து வரும் சூழலில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பிரபல நடிகரும், தவெக நிர்வாகியுமான ரவி மரியா, தற்போதைய ஆட்சியில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் மற்றும் எளிய மக்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகள் குறித்து விரிவாகப் பேசினார்.
முதலமைச்சர் விஜய்யுடன் கடந்த 30 ஆண்டுகளாக நட்புறவு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட ரவி மரியா, “கடந்த ஆட்சிக் காலத்தில் பிளாட்பார வியாபாரிகள் கவுன்சிலருக்கும் போலீசுக்கும் தினமும் ரூ.500 வீதம் மாதம் ரூ.30,000 வரை கப்பம் கட்டும் அவல நிலை இருந்தது. ஆனால், விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த லஞ்சப் பணம் மிச்சமாகி உள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். அதுமட்டுமன்றி, காவல்துறையில் எந்த இடையூறும் இன்றி படப்பிடிப்பு அனுமதிகள் எளிதாகக் கிடைக்கின்றன. இதற்கெனச் தனியாகக் பணம் எதுவுமே கேட்கப்படுவதில்லை என்பதற்கு நானே சாட்சி” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தவெக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகன் குறித்துப் பேசிய அவர், அவரது சிறந்த பேச்சுத்திறனைப் பாராட்டியதுடன், காலமும் இயற்கையும் அவரைச் சரியான இடத்தில் கொண்டு சேர்த்து அமைச்சராக்கியுள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் திரைத்துறை சார்ந்த கோரிக்கை ஒன்றை முன்வைத்த அவர், 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை விருதுகள் வழங்குவதைத் தவிர்த்து, ஒவ்வொரு வருடமும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களிலேயே முந்தைய ஆண்டிற்கான மாநில திரைப்பட விருதுகளை வழங்கத் தனிக் குழு அமைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் கலைஞர்களுக்கு உரிய நேரத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார்.
திரைத்துறையிலிருந்து வந்த ஒருவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது கலை உலகிற்கு கூடுதல் பெருமை என்று சுட்டிக்காட்டிய ரவி மரியா, “நமது நண்பரே முதலமைச்சராக இருக்கும் இந்த பொற்காலத்தில் திரைத்துறையைக் காப்பாற்றிவிட்டால், தமிழகத்தின் மற்ற அனைத்துத் துறைகளையும் எளிதாகக் காப்பாற்றிவிட முடியும். அனைத்துத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த அரசு மிக விரைவில் தீர்வுகாணும்; முதலமைச்சர் விஜய்யின் இந்த நேர்மையான ஆட்சியில் தமிழகம் மாபெரும் வளர்ச்சியடையும்” என்று நம்பிக்கையுடன் தனது உரையை நிறைவு செய்தார்.
