தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரே இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. யூடியூபர் திருநாவுக்கரசு என்பவர் தன்னிடம் போனில் பேசி, கட்சி மாறினால் ரூ.35 கோடி தருவதாகவும், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறிப் பேரம் பேசியதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, யூடியூபர் திருநாவுக்கரசு, தியாகராஜன் மற்றும் திமுக ஆதரவாளர்களான ரமேஷ், கார்த்திக் ஆகிய 4 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் கைதான கார்த்திக் என்பவர் திமுகவின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளராகப் பதவி வகித்து வருகிறார் என்பதும், கார்த்திக்கும் ரமேஷும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, இந்த சதித் திட்டம் தொடர்பாக செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தற்போது இந்த விவகாரத்தில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜா மட்டுமின்றி மேலும் 6 தவெக எம்.எல்.ஏக்களிடமும் இதேபோன்று குதிரை பேரம் நடத்தப்பட்டதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலூர் எம்.எல்.ஏ வினோத் கண்ணன், கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ முகுந்தன், நாமக்கல் எம்.எல்.ஏ திலீப், பொன்னகரம் எம்.எல்.ஏ கஜேந்திரன் மற்றும் திருப்பத்தூர் எம்.எல்.ஏ திருப்பதி ஆகியோரிடம் பேரம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே, தற்போதைய அமைச்சரும் அவிநாசி தொகுதி எம்.எல்.ஏவுமான கமலியிடமும் பேரம் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. தவெக எம்.எல்.ஏக்கள் யார் யாரிடம் யாரெல்லாம் பேரம் பேசினார்கள் என்பது குறித்து போலீசார் தற்போது தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
