“விஜய் தான் அடுத்த முதல்வர்”… பெரம்பூரில் 70,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி?…மே 4-க்கு முன்பே தேர்தலை முடித்து வைத்த தவெக நிர்வாகி…!

By Nanthini on சித்திரை 25, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவுவதால் இம்முறை வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது பெரும் புதிராகவே உள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்திருப்பதால், அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்தச் சூழலில், பெரம்பூர் தொகுதி தவெக நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் “குபீர்” ரகமாக வைரலாகி வருகிறது. இன்னும் வாக்கு எண்ணும் பணியே தொடங்காத நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜய், 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுவிட்டதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவெகவினர் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே ‘கற்பனை அமைச்சரவை’ பட்டியல் போட்டு அலப்பறை செய்து வரும் நிலையில், இந்த வெற்றி போஸ்டர் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

   

பெரம்பூர் மட்டுமின்றி, திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜயராஜ் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும் அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. போஸ்டர் அடித்த கையோடு நிறுத்தாமல், விஜய்யை தமிழக முதலமைச்சராகவே உருவகப்படுத்தி ஒரு படி மேலே சென்றுள்ளனர் அக்கட்சியினர். “மக்களின் முதல்வர்” என விஜய்யைக் கொண்டாடும் இந்த அதீத தன்னம்பிக்கையைப் பார்த்து மாற்றுக்கட்சியினர் வியப்படைந்துள்ளனர்.

   

தவெக நிர்வாகி வீராவின் இந்த அதிரடி போஸ்டரைக் கண்டு திமுக மற்றும் அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பயங்கரமாகக் கலாய்த்து வருகின்றனர். “ரிசல்ட் வருவதற்கு முன்பே இப்படி ஒரு கொண்டாட்டமா?” என்றும், “தவெகவினரின் கற்பனை குதிரை ஓவர் ஸ்பீடாக ஓடுகிறது” என்றும் மீம்ஸ்கள் பறக்கின்றன. ஒருபுறம் இது வேடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும், தவெக தொண்டர்களின் இந்த அதீத உற்சாகம் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.