நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், கணவரை இழந்து தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியின் வீட்டில் 13 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்த சண்முகவள்ளி (70) என்ற மூதாட்டி, தனது வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், மர்ம நபர்கள் அவரது வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் தங்களின் அடையாளத்தை மறைக்க கேமராவை திசை திருப்பியது தெரியவந்தது. மேலும், அந்த கேமரா பதிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், இந்த துணிகரச் சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பது காவல்துறையினருக்குத் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இசக்கிராஜா, நெல்லை அரசு மருத்துவமனை அருகே ஜூஸ் கடை நடத்தி வருவதுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் நெல்லை வடக்கு மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதைக் கண்டித்து, தவெக வடக்கு மாவட்டச் செயலாளர் மரிய ஜான் அவர்களின் உத்தரவின்பேரில், இசக்கிராஜா கட்சிகியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சி அல்லது வளர்ந்து வரும் கட்சிகளின் தொண்டர்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
