சபையில் உளறிய தவெக எம்.எல்.ஏ… “போதை உருவாக்கணும்”…. கணியன் பூங்குன்றனார் பேரையே மாத்திட்டாரு…. அதிர்ச்சியில் உறைந்த தளவாய் சுந்தரம்….!

By Nanthini on புரட்டாதி 9, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் உரை குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, திரு.வி.க. நகர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ பல்லவி சட்டமன்றத்தில் ஆற்றிய கன்னியுரை, அவர் சொற்களைத் தவறாக உச்சரித்த விதம் மற்றும் தடுமாறிய பேச்சு காரணமாக நெட்டிசன்களின் கடும் விமர்சனத்துக்கும் கேலி கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடர்ந்து துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் முதன்முறையாகப் பேசத் தொடங்கிய எம்.எல்.ஏ பல்லவி, தமக்குக் கடுமையான பதற்றம் இருப்பதாகத் தெரிவித்து எழுத்துப்பூர்வ உரையைப் பார்த்துப் படிக்கத் தொடங்கினார். அவையை வழிநடத்திய மாற்று சபாநாயகர் தளவாய் சுந்தரம், “பதற்றப்படாமல் தொடர்ச்சியாகப் பேசுங்கள், தவறு ஏதுமில்லை” என்று அவருக்கு ஊக்கமளித்தார். இருப்பினும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புகழ்பெற்ற வரிகளைத் தந்த சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் பெயரை “காணியாம் பூங்குன்றான்” எனத் தவறாக வாசித்தார்.

   

மேலும், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் தொடர்பான கோரிக்கைகளைப் பேரவையில் முன்வைக்கும் போது, “போதை உருவாக்க வேண்டும், போதை மையம் உருவாக்க வேண்டும்” என மாற்றிப் பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, தொகுதிச் சிக்கல்கள் குறித்து அவர் தொடர்ந்து உரையாற்றினார். ஏற்கெனவே தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி சட்டசபையில் தமிழைச் சரியாகப் படிக்க முடியாமல் திணறிய சம்பவம் சர்ச்சையான நிலையில், தற்போது எம்.எல்.ஏ பல்லவியின் இந்த உரையும் அதே வரிசையில் இணைந்து விமர்சனப் பொருளாக மாறியுள்ளது.

   

பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் போன்ற தமிழ் அறிஞர்களும், மாற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பெருமக்களும் செந்தமிழில் முழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சட்டமன்ற அவையில், மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகியுள்ள தவெக உறுப்பினர்கள் அடிப்படைத் தமிழ் வார்த்தைகளைக் கூடப் பார்த்துப் படிக்க முடியாமல் திணறுவது வேதனை அளிப்பதாகச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.