ஒரே நாளில் 3 விக்கெட் அவுட்…. “TVK-வில் இணைந்த மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார்” …. முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசனின் திடீர் அரசியல் ட்விஸ்ட்….!

By Nanthini on ஆனி 20, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பிரதான கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் நாளுக்கு நாள் தனது அரசியல் பலத்தை அதிரடியாக அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று மாற்றுக் கட்சியினர் தங்களை இணைத்துக் கொள்ளும் பிரம்மாண்ட விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றைய சனிக்கிழமை இணைப்பு விழாவும் அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்களின் வருகையால் பனையூர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய விழாவின் முக்கிய ஈர்ப்பாக, தமிழ் சினிமாவின் பிரபல மூத்த நடிகரான மன்சூர் அலிகான் மற்றும் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் பனையூர் தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தனர்; இதில் ஆர்.வி.உதயகுமார் கடந்த வாரம்தான் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சரான கோமதி சீனிவாசனும் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக, திமுக, மீண்டும் அதிமுக, பின்னர் பாஜாக எனப் பல்வேறு அரசியல் பயணங்களைக் கடந்து, கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்திருந்த கோமதி சீனிவாசன், தற்போது அங்கிருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகியுள்ளார். இவர்களுடன் தமிழகத்தின் ஏனையப் பிரதான கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிகாரப்பூர்வமாகத் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

   

இருப்பினும், இந்த பிரம்மாண்ட இணைப்பு விழாவில் ஒரு சில அதிருப்தியான சம்பவங்களும் அரங்கேறின. காலை 10 மணியளவில் விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக அமைச்சர்களான ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வர தாமதமானது. இதன் காரணமாக பனையூர் அலுவலகக் கதவுகள் திறக்கப்படாததால், அங்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வாசலிலேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தவெகவில் இணைந்த போதும், அதிமுகவினர் பனையூர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் இதேபோன்ற சூழல் நிலவியது இங்கு குறிப்பிடத்தக்கது.