“85% சீட் தவெகவுக்கு மட்டும் தான்”…. கூட்டணி கட்சிகளுக்கு செக் வைக்க விஜய் போடும் மாஸ்டர் பிளான்… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

By Nanthini on ஐப்பசி 28, 2026

Spread the love

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வியூக ரீதியில் களமிறங்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. கிராமங்கள் தொடங்கி அனைத்து மட்டங்களிலும் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் தங்களுடைய முதல் அக்னிப் பரிட்சையாக இந்தத் தேர்தலை தவெக கருதுகிறது. இதன்காரணமாக, மொத்தமுள்ள உள்ளாட்சிப் பதவிகளில் 85 சதவீத இடங்களை தவெகவே நேரடியாகக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீத இடங்களை மட்டுமே காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

பனையூர் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், வேலூர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையே நிலவி வந்த உட்கட்சி பூசல்களுக்கு இக்கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, கட்சிக்குள் ஒற்றுமையை பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பொறுப்புகளை அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் ஒப்படைக்கவும், சீட் பங்கீடு தொடர்பான அதிகாரங்களை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

   

இருப்பினும், கூட்டணி கட்சிகள் மத்தியில் இந்தச் செய்தி பகிர்வு சவாலாகவே பார்க்கப்படுகிறது. காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களையும், குறிப்பாக மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளையும் குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றன. மாநகராட்சிகளைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க தவெக தலைமை விரும்புவதால், கூட்டணி கட்சிகளை 15 சதவீத இடங்களுக்கு மட்டும் சம்மதிக்க வைப்பது தவெகவிற்கு பெரிய ராஜதந்திர சோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விஜய்யின் ஒற்றை முகத்தை மட்டுமே நம்பி களமிறங்காமல், உள்ளூர் அளவில் செல்வாக்கு மற்றும் பலம் வாய்ந்த நபர்களைக் கட்சியில் இணைத்து வலுவான அடித்தளம் அமைக்க தவெக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் தவெகவின் உண்மையான பலத்தை நிர்ணயிக்கும் என்பதால், எந்தவித உட்கட்சி மோதல்களுக்கும் இடமளிக்காமல் முன்கூட்டியே பேச்சுவார்த்தைகளை நடத்தி வெற்றியை உறுதி செய்ய அக்கட்சி தலைமை உறுதியாக உள்ளது.