தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். பிப்ரவரி மாதத்தில் சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து உற்சாகப்படுத்திய அவர், தற்போது டெல்டா மாவட்டங்களை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். இதன்படி, மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் தஞ்சாவூரில் தவெக கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சந்திப்பிற்கான அனுமதி கோரி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் காவல்துறையிடம் மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். தஞ்சாவூரைத் தொடர்ந்து பொள்ளாச்சியிலும் இதுபோன்ற நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தை நடத்த விஜய் முனைப்பு காட்டி வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் முதல் வாரத்திற்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கு முன்னதாகவே கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
நகர்ப்புறங்களில் தனக்கு இருக்கும் செல்வாக்கை கிராமப்புறங்களிலும் நிலைநாட்டும் முயற்சியாகவே தஞ்சாவூர் சந்திப்பு பார்க்கப்படுகிறது. அங்குள்ள விவசாயம் சார்ந்த பின்னணி கொண்ட மக்களுடனும், அடித்தட்டுத் தொண்டர்களுடனும் நேரடியாக உரையாடி, கட்சியின் கொள்கைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் கொண்டு சேர்க்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது டெல்டா பிராந்தியத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தப் பயணங்களின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்யும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தகுதியான வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் களம் காண்பதற்கான இறுதிப் பட்டியலை விஜய் விரைவில் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் விஜய்யின் இந்தத் தஞ்சைப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
