தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக திமுக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளுடன் தவெக மற்றும் நாதக ஆகிய கட்சிகளும் மல்லுக்கட்டி வருகின்றன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது இறுதிக்கட்டப் பிரச்சார உத்திகளில் மிக முக்கியமான ஒரு வாய்ப்பைத் தவறவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஒரு நேர்காணல் கூட வழங்காமல் அவர் மௌனம் காப்பது கட்சியின் வளர்ச்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் சாமானிய மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. திமுக உள்ளிட்ட கட்சிகள் முதல்வர் ஸ்டாலினின் நேர்காணல்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை டிஜிட்டல் தளங்களில் மிகத்தீவிரமாகப் பரப்பி வருகின்றன. ஆனால், தவெக தரப்பில் கொள்கை விளக்கங்களோ அல்லது தேர்தல் வாக்குறுதிகளோ அந்தளவுக்குத் தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை. வேட்பாளர்களும் இந்த டிஜிட்டல் போட்டியில் சற்றுப் பின்தங்கியே காணப்படுகின்றனர்.
விஜய் ஒரு நேர்காணல் அளித்திருந்தால், அது பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்து கட்சியின் பலத்தை அதிகரித்திருக்கும். தனது கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்குக் கூட அவர் ஒரு பேட்டி அளித்திருக்கலாம். அரசியல் வருகைக்கான நோக்கம் முதல் எதிர்காலத் திட்டங்கள் வரை அவர் நேரடியாகப் பேசியிருந்தால், அது கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு தெளிவைத் தந்திருக்கும். திமுக மற்றும் பாஜக மீதான தனது விமர்சனங்களை வலுவாக முன்வைக்கக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை இதன்மூலம் அவர் நழுவவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை விஜய் செய்தியாளர்களைச் சந்திக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆங்கில ஊடகங்களைச் சந்தித்தபோதும் கூட அவை ‘ஆஃப் கேமரா’ உரையாடல்களாகவே முடிந்துவிட்டன. தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் தருவாயிலும் இந்த மௌனம் நீடிப்பது, வாக்காளர்களின் மனதில் ஒரு தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த யுக்தி விஜய்க்கு கைகொடுக்குமா அல்லது பலவீனமாக மாறுமா என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெரியவரும்.
