தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகள் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன. குறிப்பாக, தவெகவின் தேர்தல் சின்னமாக ‘விசில்’ அறிவிக்கப்பட்ட பிறகு, அக்கட்சியின் தொண்டர்கள் பொது இடங்களில் தொடர்ந்து விசில் ஊதி வருவது பொதுமக்களிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது தவெக நிர்வாகி செங்கோட்டையன் முன்னிலையில் தொண்டர்கள் விடாமல் விசில் அடித்து இடையூறு செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செங்கோட்டையன், சத்தியபாபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்க செங்கோட்டையன் வந்தபோது, அங்கிருந்த தொண்டர்கள் உற்சாக மிகுதியால் தொடர்ந்து விசில் ஊதிக்கொண்டே இருந்தனர். அங்கிருந்த நிர்வாகிகள் பலமுறை எச்சரித்தும், அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தும் தொண்டர்கள் விசில் அடிப்பதை நிறுத்தவில்லை.
இந்தச் சூழலில் செய்தியாளர்களை எதிர்கொண்ட செங்கோட்டையன், விசில் அடிப்பவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்ற ரீதியில் நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் கருத்து தெரிவித்தார். “இவர்களை ஒன்றும் செய்ய முடியாது, விசில் அடிப்பவர்கள் நிறுத்த மாட்டார்கள்; நாம் நமது பேச்சைத் தொடங்குவோம்” என்று அவர் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக அவரே, “பேருந்துகளிலோ அல்லது தூங்குபவர்கள் அருகிலோ விசில் அடித்து இடையூறு செய்ய வேண்டாம்” என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது என்று தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், கிராமப்புற மக்களின் கண்ணீரைத் துடைக்கவும், மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்கவும் தவெக ஆட்சி அமைய வேண்டும் என்றார். மேலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து நின்றாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியைத் தடுக்க முடியாது என்று அவர் மிக உறுதியாகத் தெரிவித்தார்.
