திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி கிழக்கு மாவட்டத் தவெக செயலாளர் உதயகுமார், தனது பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலையில் ஆதரவாளர்களுடன் திறந்த காரில் ஊர்வலமாகச் சென்றுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கிரேன் மூலம் அவருக்குப் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டதோடு, சாலையின் நடுவிலேயே கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடியுள்ளனர்.
இந்தச் செயலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், தவெக நிர்வாகிகளின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்குப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. புதிய கட்சி என்ற பெயரில் களமிறங்கும் நிர்வாகிகள், அதிகாரத்திற்கு வரும் முன்னரே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது ஏற்புடையதல்ல என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக மாவட்டச் செயலாளர் உதயகுமார் உட்பட சுமார் 50 பேர் மீது திருவண்ணாமலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், விதிமுறைகளை மீறி மாலை அணிவிக்கப் பயன்படுத்தப்பட்ட கிரேனையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் கட்சியின் தலைமை வரை சென்றதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சியின் நிர்வாகிகள் தங்களின் பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் போது பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
