தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி, ஆளும் திமுக அரசை வன்மையாகக் கண்டித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசியலை ஒரு வியாபாரமாகவே செய்து வரும் “தானியங்கி விற்பனை இயந்திரம்” என திமுகவைச் சாடியுள்ளது. மேல்மட்டத் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை அநாகரிக அரசியலில் ஈடுபட்டு வரும் திமுக, தன் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்களை வன்மம் ஊட்டி வளர்த்து வருவதாகவும், அதிகார மமதையோடு மக்களை மறந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பதிவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஜனநாயகப் பண்புகள் ஏதுமின்றி திமுக செயல்பட்டதன் விளைவுகளையே தற்போது அவர்கள் அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள தவெக ஐடி விங், அதிகாரச் செருக்கோடு காவல்துறையையே பகிரங்கமாக மிரட்டும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் விமர்சித்துள்ளது. “சத்திய ஆட்சி எது, சாத்தானின் ஆட்சி எது என்று மக்களுக்கே தெரியும் என்பதும் ஸ்டாலின் சாருக்கு நன்றாகவே தெரியும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படைப் புரிதலின்றி வழக்கு தொடுத்ததால், “ஒழுங்காகப் படித்துவிட்டு வாருங்கள்” என்று உச்ச நீதிமன்றம் திமுக அரசுக்கு ஓங்கி அடித்ததை நினைவூட்டியுள்ள தவெக, நீதிநெறியை மறந்து செயல்படும் திமுகவினர் ஊருக்கு உபதேசம் செய்யத் தொடங்கிவிட்டதாக எள்ளி நகையாடியுள்ளது. அத்துடன், தீய சக்தியான திமுக விதைத்து வரும் வினைகளை, விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது என்றும் எச்சரித்துள்ளது.
