திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்குத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தரப்பிலிருந்து கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசிக தரப்பில் 10 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், தவெக தரப்பு உரிய அங்கீகாரம் மற்றும் சீட்கள் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
திமுக – விசிக இடையே தொகுதிப் பங்கீட்டில் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில், தவெகவின் இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குத் தேவையான தொகுதிகளைப் பெறுவதில் விசிக உறுதியாக இருப்பதால், வரும் நாட்களில் அந்தக் கட்சியின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பது தமிழக தேர்தல் களத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
