தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் தலைவர்களிடையே வார்த்தைப் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சிவகாசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைக் கலாச்சாரம் பெருகிவிட்டதாகவும் திமுக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கூட்டணிக் கட்சிகள் மற்றும் மாற்றுக் கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்த ராஜேந்திர பாலாஜி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேமுதிக ‘ஐசியூ’ வார்டுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படும் எனச் சாடினார். மேலும், முதல்முறை தேர்தலைச் சந்திக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைப் பற்றி குறிப்பிடுகையில், “தனித்துப் போட்டியிடும் தவெக-வின் நிலைமை அந்தோ பரிதாபம் என்ற நிலைக்கு ஆளாகும்” எனத் தெரிவித்தார். அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது என்பதற்கு வரலாறே சாட்சி என்றும் அவர் முழங்கினார்.
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி மீது தேவையற்ற கோபத்தை வெளிப்படுத்துவதாக அவர் விமர்சித்தார். “ராஜதந்திரியான கலைஞர் கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை, இப்போது இருப்பவர்களா அழித்துவிடுவார்கள்?” என்று கேள்வி எழுப்பிய அவர், 53 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட அதிமுக, தற்போது இளைஞர்களின் எழுச்சியோடு புது ரத்தம் பாய்ச்சப்பட்டு வலிமையாக இருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
இறுதியாக, தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என உறுதிபடக் கூறினார். தமிழகத்தில் சுமார் 210 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலுவான முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார். இந்த அனல் பறக்கும் பேச்சால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
