தமிழக அரசியலில் விஜய் தலைமையிலான தவெக அரசுப் பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அமைச்சரவையில் அங்கம் வகிக்க, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இத்தகைய சூழலில், சமீப காலமாக இடதுசாரி கட்சிகள் மற்றும் இளைஞர்கள் அமைப்புகள் மீது அரசு மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள், ஆளுங்கட்சிக்கும் வெளியில் இருந்து ஆதரவு தரும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்துகிறதோ என்ற கேள்வியையும் பெரும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது.
குறிப்பாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற இளைஞர் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் பிறப்பித்துள்ள அவசரச் சுற்றறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடையை மீறிப் பங்கேற்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியிலான மாணவர் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் இத்தகைய அணுகுமுறை கல்வியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பாக, சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தின் போது சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்ததும் பேசுபொருளானது. மாநில அரசின் கொள்கை நிலைக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்றபோதிலும், பொது அமைதி மற்றும் கல்வி நிறுவன வளாக அமைதியைச் சுட்டிக்காட்டி அரசு காட்டிய கண்டிப்பு சர்ச்சையானது. நீட் எதிர்ப்பை ஒருபுறம் ஆதரித்துக் கொண்டே, களத்தில் போராடும் அமைப்புகளை ஒடுக்கும் போக்கை அரசு கையாளுவதாகக் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதேவேளையில், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டார கிராமங்களில் வசிக்கும் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியினரின் முழு விவரங்களையும் சேகரிக்குமாறு வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு கொந்தளிப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி உறுப்பினர்களைக் குற்றப் பின்னணி கொண்டவர்களைப் போலத் திரட்ட முயன்ற நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகள் தற்செயலானவையா அல்லது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.
