தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய்யின் அரசு 100 நாட்களை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அனைத்து விளம்பரங்களும் தமிழிலன்றி முழுமையாக தெலுங்கு மொழியிலேயே இடம்பெற்றுள்ளதால், இது வழக்கமான ஒரு அரசின் சாதனைப் பிரச்சாரமா அல்லது தமிழக வெற்றிப் கழகத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான உத்திசார் நடவடிக்கையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
“தமிழகத்தில் இருந்து அடுத்த பிரதமர் வருவார்” என்று தவெக முன்னணி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சு இதனுடன் இணைந்து பார்க்கப்படும் நிலையில், இந்த தெலுங்கு விளம்பர உத்தி அக்கட்சியின் தேசிய அளவிலான மற்றும் அண்டை மாநில அளவிலான அரசியல் லட்சியங்களின் தொடக்கப்புள்ளியாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் உற்றுநோக்குகின்றனர்.
