“கமிஷன் கிடையாது… கட்டிங் கிடையாது!… மாதந்தோறும் ரூ.51 கோடி மிச்சம்.. டாஸ்மாக்கில் இனி ‘அவர்கள்’ ஆட்டம் செல்லாது.. அதிரடி காட்டும் தவெக அரசு! ..!!

By Muthu Mani on வைகாசி 31, 2026

Spread the love

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை விற்பனைக் கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இதற்காக 11 மதுபான ஆலைகள் மற்றும் 7 பீர் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து மாதம் சராசரியாக 50 லட்சம் பெட்டி மது வகைகளும், 35 லட்சம் பெட்டி பீர் வகைகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன. கடைகளில் எந்தெந்த பிராண்டுகளுக்கு வரவேற்பு இருக்கிறதோ, அதற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பது விதியாக இருந்தாலும், கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன.

கடந்த அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில், ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற முக்கியமான மூன்று மதுபான ஆலைகளில் இருந்து மட்டுமே 60 முதல் 70 சதவீத மதுபானங்கள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ‘மிடாஸ்’ நிறுவனத்திற்கும், அதன்பின் வந்த ஆட்சிகளில் திமுக ஆதரவு நிறுவனங்களுக்கும் இந்த முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் விரும்பாத பிராண்டுகள் அதிகளவில் திணிக்கப்பட்டு, அவை விற்பனையாகாமல் பல மாதங்கள் கடைகளில் இருப்பு வைக்கும் நிலையும், தட்டுப்பாடு நிலவும் சூழலும் நீடித்து வந்தது.

   

இத்தகைய கொள்முதல் முறைகேடுகளுக்குப் பின்னால் பல ஆண்டுகளாக ஒரு பெரிய கமிஷன் நெட்வொர்க் இயங்கி வந்துள்ளது. மதுபான ஆலைகள் வழங்கும் ஒரு பெட்டிக்கு, ஆட்சியின் உயர்மட்டத்திற்கு 50 ரூபாய், துறையின் உயர்மட்டத்திற்கு 10 ரூபாய் என மொத்தம் 60 ரூபாய் கமிஷனாக (கட்டிங்) வசூலிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் மட்டும் மாதந்தோறும் சுமார் 51 கோடி ரூபாய் வரை முறைகேடாகச் சென்று சேர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இந்த நடைமுறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

   

மதுபானங்கள் கொள்முதலில் இனி முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க டாஸ்மாக் நிறுவனம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. அதன்படி, பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு பெட்டிக்கு 60 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு வந்த கமிஷன் முறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களுக்குச் சென்ற 51 கோடி ரூபாய் ‘கட்டிங்’ தொகை தற்போது மிச்சமாகியுள்ளது. மேலும், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் முன்னுரிமை தராமல், பாரபட்சமின்றி கடைகளில் எந்தெந்த மது வகைகளுக்குத் தேவை அதிகமாக இருக்கிறதோ, அதை முறையாகக் கணக்கெடுத்து அதற்கு ஏற்ப மட்டுமே இனி கொள்முதல் செய்ய டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.