தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் நிலவி வந்த முறைகேடுகள் மற்றும் ஊழல்களைக் கண்டறிந்து ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மின்சாரத் துறை, அரசு மருத்துவமனைகள், குவாரிகள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்கள் என அனைத்துத் தளங்களிலும் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த முதல்வர் விஜய் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அரசு அதிகாரிகள் எந்தவொரு காரணத்திற்காகவும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அவர், அமைச்சர்களையும் அந்தந்த துறைகளில் தொடர் கள ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர்களின் இந்த அதிரடி ஆய்வுகளின் ஒரு பகுதியாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு நேரில் சென்று முறைகேடுகளைக் களைந்து வருகிறார். சமீபத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்ற அவர், அங்கு பக்தர்களைச் சிறப்புத் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சட்டவிரோதமாகப் பணம் வசூலித்த சிலரைக் கையும் களவுமாகப் பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். அமைச்சரின் இத்தகைய நேரடி நடவடிக்கைகள், கோவில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதோடு, பக்தர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பணி தொடர்பாக முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 109 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் பெருமளவில் லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மீண்டும் நேர்மையான முறையில் நேர்காணல் நடத்தி இப்பணியிடங்களை நிரப்ப அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
