“2.09 கோடி vs 2 கோடி”…. திமுகவையே ஓரம் கட்டிய தவெக…. தமிழக அரசியலை அதிரவைத்த ஆதவ் அர்ஜுனாவின் ரிப்போர்ட்….!

By Nanthini on தை 25, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  தீவிரமாக இயங்கி வரும் நிலையில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது தவெகவுக்கு 2 கோடிக்கும் அதிகமான வாக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். முந்தைய தேர்தல்களில் பெரிய கட்சிகள் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டு அவர் முன்வைத்துள்ள இந்த வாதம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

தன்னுடைய பேச்சிற்கு வலுசேர்க்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா சில தரவுகளை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் சுமார் 2.25 கோடி ரேஷன் கார்டுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு குடும்பத்திற்கு ஒரு வாக்கு என்று கணக்கிட்டாலே தவெகவுக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதாகக் கூறினார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமாகப் பெற்ற வாக்குகளே 2.09 கோடி தான் என்றும், ஆனால் தவெக தற்போதே அந்த எண்ணிக்கையைத் தாண்டிவிட்டதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

   

இருப்பினும், ஆதவ் அர்ஜுனாவின் இந்தக் கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளாகி வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற பாரம்பரியமான பெரிய கட்சிகளே தனித்துப் போட்டியிடும் போது இதுவரை 2 கோடி வாக்குகளைப் பெற்றதில்லை என்பது நிதர்சனம். 2021 தேர்தலில் திமுக தனித்து 1.74 கோடி வாக்குகளையும், அதிமுக 1.53 கோடி வாக்குகளையும் மட்டுமே பெற்றிருந்தன. இந்தச் சூழலில், இன்னும் ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத ஒரு கட்சிக்கு இத்தனை கோடி வாக்குகள் இருப்பதாகக் கூறுவது மிகையானது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

   

ஆதவ் அர்ஜுனா ஒவ்வொரு கூட்டத்திலும் தவெகவின் வாக்கு சதவிகிதம் குறித்து மாறுபட்ட தகவல்களை அளித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. முன்னதாக தவெகவுக்கு 23%, பின்னர் 26%, அதன்பின் 34% எனப் பல்வேறு எண்களைக் குறிப்பிட்டு வந்த அவர், தற்போது ‘2 கோடி வாக்குகள்’ என்ற புதிய இலக்கைச் சொல்லியிருக்கிறார். தவெகவின் களக்கட்டமைப்பு குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, புள்ளிவிவரங்களை முன்வைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்த அவர் முயல்வதாகத் தெரிகிறது. எது எப்படியிருப்பினும், 2026 சட்டமன்றத் தேர்தலில்தான் தவெகவின் உண்மையான பலம் என்ன என்பது தெரியவரும்.