“ஆட்சியை கவிழ்க்க ஒரே ஒரு போன் கால் போதும்”…. “தூக்கியெறியப்படும் ஆட்சி?”… காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களால் முதலமைச்சர் விஜய்க்கு வந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on புரட்டாதி 4, 2026

Spread the love

தமிழக அரசியலில் தவெக – காங்கிரஸ் கூட்டணியிடையே வெடித்துள்ள பிரதமர் வேட்பாளர் குறித்த வார்த்தை மோதல் தற்சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பில் 2029-ஆம் ஆண்டிற்கான பிரதமர் வேட்பாளர் ஆதரவில் தமிழக முதலமைச்சர் விஜய் 9.2 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, விஜய்தான் அடுத்த பிரதமர் என்றும், ராகுல் காந்தியே அவரை பிரதமர் இருக்கையில் அமர வைப்பார் என்றும் தவெக எம்.எல்.ஏ கனிமொழி மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசி வருவது அரசியல் களத்தில் உரசலை உருவாக்கியுள்ளது.

இந்தக் கருத்துக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய அளவில் ராகுல் காந்தியைப் பிரதமராக்கும் நோக்கில் இயங்கி வரும் நிலையில், தவெகவினரின் இந்த பேச்சுக்கள் அவர்கள் இன்னமும் ரசிகர் மனநிலையிலேயே இருப்பதைக் காட்டுவதாகக் காங்கிரஸ் தரப்பில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் ராஜ்யசபா எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் புருவங்களை உயரச் செய்துள்ளது.

   

இச்சூழலில், இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள திமுக செய்தித்தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தவெகவினருக்குக் காரசாரமான பதிலை அளித்துள்ளார். “விஜய் தமிழ்நாட்டிலேயே தனித்து பெரும்பான்மையைப் பெறவில்லை; காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளின் ஆதரவுடன்தான் ஆட்சியையே அமைத்துள்ளார். ஒரு மாநிலத்தில் கூட சொந்தமாகப் பெரும்பான்மை பெற முடியாத சூழலில், அவரால் எப்படி இந்தியப் பிரதமராக முடியும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

   

மேலும் தொடர்ந்த அவர், “தமிழ்நாடு தனி நாடாக மாறினால் வேண்டுமானால் விஜய் அதற்குப் பிரதமர் ஆகலாம். தவெக ஆட்சியில் 5 எம்.எல்.ஏ-க்களுடனும் 2 அமைச்சர்களுடனும் இருக்கும் காங்கிரஸ், ராகுல் காந்தியைப் பிரதமராக்கவே விரும்புகிறது. அவர்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றால் இந்த ஆட்சியே கவிழ்ந்துவிடும் நிலைக்குத் தள்ளப்படும்” என எச்சரிக்கும் வகையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வார்த்தை மோதல்கள் தமிழக அரசியல் கூட்டணிக் கணக்குகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.