திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிரான முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இகைதைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆகியோர் கண்டனங்களைத் தெரிவித்திருந்தாலும், இது வெறும் சம்பிரதாயமான எதிர்க்கட்சிக் கண்டனம் மட்டுமே என திமுகவின் சீனியர்கள் கருதுகின்றனர்.
விஜய் அரசு பொறுப்பேற்றது முதல், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை அம்பலப்படுத்தி வருவதே தற்போதைய ஆட்சியாளர்களின் வியூகமாக உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே சட்டமன்றத்தில் காரசார விவாதங்களும் நடைபெற்றன. இந்த சூழலில், தங்களது வழக்குகளில் இருந்து தப்புவது அவரவர் தனிப்பட்ட பொறுப்பு என்றும், கைதானால் கட்சித் தலைமை கண்டன அறிக்கை மட்டுமே வெளியிடும் என்றும், வழக்கறிஞர் கட்டணங்களை சம்பந்தப்பட்டவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கட்சித் தலைமை பல மாதங்களுக்கு முன்பே தங்களுக்கு எச்சரித்துவிட்டதாக மாஜி அமைச்சர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாகவே துரைமுருகன், கே.என்.நேரு, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல மூத்த தலைவர்களும் தங்களது சொந்த முயற்சியிலும், சட்டப்பூர்வ சோர்ஸ்கள் மூலமாகவும் வழக்குகளைச் சமாளிக்க முயன்று வருகின்றனர். இருப்பினும், அன்பில் மகேஷின் முன் ஜாமீன் முயற்சி தோல்வியடைந்து அவர் கைதானது, கே.என்.நேரு, சேகர்பாபு, செந்தில்பாலாஜி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களிடையே கடும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்து நாம் தான் இலக்காக இருப்போமோ என்ற கிலியில் அவர்கள் ஆழமாக மூழ்கியுள்ளனர்.
இந்தச் சூழலில், அன்பில் மகேஷை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு தீவிர திட்டமிடல் செய்து வருகிறது. குறிப்பாக, தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார விவகாரத்தில் கைமாறியதாகக் கூறப்படும் 420 கோடி ரூபாய் ஊழல் பணம் மற்றும் அதில் கட்சித் தலைமைக்கும், உதயநிதிக்கும் எத்தகைய பங்குகள் வழங்கப்பட்டன என்பது குறித்தான சுமார் 120 கேள்விகள் அடங்கிய பட்டியலை போலீஸார் தயாரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் திமுகவின் உயர்மட்டத் தலைவர்களை இந்த வழக்கில் சிக்க வைக்க தீவிர முயற்சிகள் நடப்பதாகப் பேசப்படுகிறது.
கடந்த காலத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட போது பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட போதிலும், அவர் கட்சித் தலைமையை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்றார். அதேபோன்றதொரு கடுமையான சோதனையை இப்போது அன்பில் மகேஷ் எதிர்கொள்ளவிருக்கிறார். இருப்பினும், எத்தகைய இக்கட்டான சூழல் ஏற்பட்டாலும் அவர் உதயநிதியைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்றே அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன.
