தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியிலும், சத்தியபாமா தாராபுரம் தொகுதியிலும் தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் திமுக மற்றும் அதிமுக சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.
இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய், 11 அமைச்சர்கள் மற்றும் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரம்மாண்ட தேர்தல் பொறுப்புக் குழுவை அமைத்துள்ளார். இதன்படி, மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும், தாராபுரம் தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் கே.ஜி. அருண்ராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளையும் தீவிரமாகக் கண்காணிக்க அமைச்சர்கள் என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் தவெக-வின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய வலுவான இணை மற்றும் துணைப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதிக்கு அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் ஆகியோருடன் சரவணமூர்த்தி, தியாகராஜன், விஜயராஜ், காமாட்சி ஆகிய எம்.எல்.ஏ-க்களும், தாராபுரம் தொகுதிக்கு அமைச்சர்கள் விஜய் பாலாஜி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் பாலமுருகன், சத்தியபாமா, ராம்குமார், திலீப், சத்யா ஆகிய எம்.எல்.ஏ-க்களும் களப்பணியாற்றவுள்ளனர்.
தேர்தல் பணிகளைப் முடுக்கிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், கழகத் தோழர்கள் அனைவரும் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களுடன் இணைந்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தவெகவின் வெற்றிச் சின்னமான ‘விசில்’ சின்னம் மீண்டும் வாகை சூட வேண்டும் என்றும், இடைத்தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்க தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தவெக சார்பில் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் விரைவில் நடத்தப்படவுள்ளன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய இப்படை, களத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
